இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே கட்சியைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், மீண்டும் அங்கு அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இலங்கையில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்ரமசிங்கே மாற்றப்பட்டு, ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, பெரும்பான்மை நிரூபிக்க வேண்டியிருந்த நிலையில், நவம்பர் 16-ம் தேதி நாடாளுமன்றத்தை முடக்கி வைப்பதாக, அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, ராஜ்பக்ச மற்றும் ரணில் ஆகிய இரு அணிகளும், தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களின் ஆதரவைப் பெற முயற்சித்து வருகின்றனர். ராஜபக்சவுக்கு 96 எம்.பி.க்களின் ஆதரவும், ரணிலுக்கு 106 எம்.பி.களின் ஆதரவும் இருந்த நிலையில், பதவி ஆசை காரணமாக ரணில் கட்சியைச் சேர்ந்த 4 எம்.பி.க்கள், ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முயற்சித்து வரும் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.