ராஜராஜசோழன் சமாதியில் சதய விழா கோலாகலம்

கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜசோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் அவரது சதய விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தெற்காசியா முழுவதையும் கட்டியாண்டவரும், தஞ்சை பெரிய கோயில் எனும் தரணி புகழும் பிரம்மாண்டத்தை கட்டியெழுப்பியவருமான ராஜராஜ சோழன் கி.பி.985 ல் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். இதையொட்டி ஆண்டுதோறும் சதய நட்சத்திரத்தில் அந்த மாமன்னருக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

கும்பகோணம் அருகே, உடையாளூரில் உள்ள பள்ளிப்படையில் ராஜராஜசோழன் சமாதி இருக்கிறது. அருகே சிவலிங்கம் ஒன்றும் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ராஜராஜ சோழனின் சதய விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. விழாவை ஒட்டி சோழனின் சமாதி அருகே சோழர்களின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

பின்னர் மங்கள இசை ஊர்வலத்துடன், ராஜராஜனின் ஐம்பொன் சிலையை மாட்டுவண்டியில் வைத்து பாரம்பரிய முறையில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.சோழ இளவரசர் மன்னர்மன்னன் விழாவில் பங்கேற்றார்..தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர் உடையாளூரில் குவிந்ததால் அவ்வூரே விழா கோலம் பூண்டது. பொதுமக்களுக்கு ஆங்காங்கே அன்தானமும் வழங்கப்பட்டது. முன்னதாக உடையாளூர் கைலாசநாதர் ஆலயத்தில் சிவபெருமானுக்கு, யாகங்கள், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் திருக்கைலாய வாத்திய முழக்கங்களுடன், பன்னிரு திருமுறை ஊர்வலம் நடைபெற்றது. .

இதே போல, தஞ்சை பெரிய கோவிலில் தமிழக அரசு சதய விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கவியரங்கம், பட்டிமன்றம், இசை அரங்கம், நாட்டிய அரங்கம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

முன்னதாக தஞ்சை பெரிய கோவிலில் இருந்து திருமுறை வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. யானை மீது திருவாசகம் புத்தகத்தை வைத்து நான்கு ராஜ வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.தஞ்சை பெரிய கோவிலில் அமைந்திருக்கும்
சிவலிங்கத்திற்கு 48 திரவியப் பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Exit mobile version