உதகையில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்று, மழை நீர் சேகரிப்பில் முழு கவனம் செலுத்தி, ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் 2 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் மழை நீரை சேமித்து வருகிறது.
உதகையில் உள்ள மிகப்பழைமை வாய்ந்த பள்ளிகளில் புனித ஹில்டாஸ் பெண்கள் பள்ளியும் ஒன்று.125 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இப்பள்ளி மாணவர்களின் கல்வியில் மட்டுமல்லாது, மழை நீர் சேகரிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.இப்பள்ளியின் பழைய வகுப்பறை கட்டிடங்களில் ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு குழாய்கள் மற்றும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த மழைநீர் சேகரிப்பு குழாய்கள் மற்றும் தொட்டிகளை சீரமைத்து வரும் பள்ளி நிர்வாகம், கட்டிடங்கள் அனைத்திலிருந்து வழியும் மழை நீரையும், விளையாட்டரங்கிலிருந்து வழியும் மழை நீரையும் 16 மழைநீர் சேகரிப்பு தொட்டிகளில் சேமித்து வருகிறது. அதன்படி, ஒரு முறை மழைப் பெய்யும் போது சராசரியாக 2 லட்சத்து 33 ஆயிரம் லிட்டர் நீர் சேமிக்கப்படுகிறது.
இவ்வாறு சேமிக்கப்பட்ட மழைநீரை, விடுதிகளில், மாணவிகள் துணி துவைக்கவும், வாகனங்களைக் கழுவவும், குளிக்கவும் பயன்படுத்துகின்றனர். இது ஒரு மழை நீர் சேமிப்பு மாதிரி திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதோடு, மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் இத்திட்டம் எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.
மழை நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதன் மூலம், தங்கள் பள்ளியில் மழைநீரை சேமித்து அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கு தூண்டுகோலாக இருந்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்களுக்கும் தமிழக அரசிற்கும் மாணவிகள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.