மழைநீர் சேகரிப்பு கண்ட ஆட்சி…

மழைநீர் சேகரிப்பு மக்களுக்கு ஏன் இனியமையாதது என்பதையும், மழைநீர் சேகரிப்பினால் தமிழகம் பயன்பெறக் காரணமான, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மழைநீர் சேகரிப்புத் திட்டம் குறித்தும் இந்தத் தொகுப்பில் பார்ப்போம்…

நீர்இன்று அமையாது உலகு’ – என்று சொன்ன திருவள்ளுவர் தான், ‘வான்இன்று அமையாது ஒழுக்கு’ – என்றும் சொன்னார். குடிநீரின் முக்கிய ஆதாரம் மழைநீர் தான். உலகளாவிய நிலவரங்களின்படி, நிலத்தில் பெய்யும் மழையில் சராசரியாக 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலக்கின்றது, 35% வெயிலில் ஆவியாகின்றது, 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுகின்றது, இது போக 14% மட்டுமே பூமியால் உறிஞ்சப்படுகிறது, இதுவே நிலத்தடி நீராகின்றது. 

ஆனால் பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள், தார்ச்சாலைகள், சிமெண்ட் தளங்கள் – அதிகம் அமைக்கப்படுவதால் அந்த 14% மழைநீர் கூட பூமிக்குள் செல்ல வழியில்லை. பெருநகரங்களில் பெய்யும் மழையில் அதிகபட்சம் 5% மட்டுமே பூமிக்குள் போகின்றது என்ற நிலையே கடந்த 2001 வரை இருந்தது. இந்த நிலையில்தான் நீர் மேலாண்மையில் உலகுக்கே வழிகாட்டும் விதமாக ‘கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்ட’த்தை கடந்த 2001ஆம் ஆண்டில் தமிழகத்தில் கொண்டு வந்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள். 

தரையில் பொழிய வழியில்லாமல் வீடுகளின் கூரைகளில் பெய்யும் மழையை சேகரித்து, வடிகட்டி மீண்டும் பயன்படுத்துவது அல்லது மீண்டும் பூமிக்கே அனுப்பி வைப்பது என்பதே மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஆகும். ஒரு நாளில் பெய்யும் மழையை இதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும். ’கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்ட’த்தின் படி வீடுகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனை, தொழிற்சாலைகள், தனியார், அரசு கட்டடங்கள் உள்ளிட்ட ஆயிரம் சதுரஅடிக்கு மேல் உள்ள கட்டடங்களில் அனைத்திலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை கட்டாயம் அமைக்க அரசு உத்தரவிட்டது. 

மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கத் தவறினால் அவர்களின் மின் இணைப்பும் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. புதிய கட்டடங்களுக்கு அனுமதி கோரும் போது மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால் மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டது. 

மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்குவதில் யாருக்காவது நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டால் அவர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமே அதனைக் குறைந்த கட்டணத்தில் உருவாக்கியும் கொடுத்தது. முன்மாதிரியாக சென்னை மாநகராட்சி அனைத்து மாநகராட்சிக்கு கட்டடம், பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலக கட்டடங்கள் சமுதாய கூடங்கள், துணை மின் நிலையங்கள், பாலங்கள், பூங்காக்கள், மேம்பாலம் உள்பட 1,344 இடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தியும் காட்டியது. 

இப்படியாக ஊர் கூடித் தேர் இழுத்ததால், இந்தத் திட்டம் ஒரே ஆண்டில் சென்னையின் 90% கட்டடங்களில் செயல்படுத்தப்பட்டது. அதன் விளைவாக அடுத்து வந்த 5 ஆண்டுகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் வரலாறு காணாத அளவில் 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தது.

 

அம்மா அவர்களின் இந்த திட்டம் இந்திய நாடாளுமன்றம் முதல் ஐநா சபை வரை பல்வேறு இடங்களில் பலத்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒன்று. இப்போது இந்தியாவின் பல மாநிலங்களும் தமிழகத்தின் இந்த முன்மாதிரியைப் பயன்படுத்தி வருகின்றனர். தமிழக மக்களால் அம்மாவின் பெயர் சொல்லும் சாதனைத் திட்டங்களில் ஒன்றாக, இந்த வெய்யிலிலும் மக்களின் தாகம் தீர்த்துவரும் திட்டமாக ’கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டம்’ இன்றும் நினைவு கூறப்படுகிறது.

Exit mobile version