நீர் பிரச்னையை சமாளிக்க மழைநீர் சேகரிப்பு அவசியம்

தண்ணீர் சிக்கனம், மழை நீர் சேகரிப்பு குறித்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும் வழிமுறைகளையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசின் திட்டங்களை செயல்படுத்திய சென்னை கட்டடங்களில், நீர்ப்பற்றாக்குறை முற்றிலும் நீங்கியுள்ளது. இதுகுறித்த ஓர் சிறப்புத்தொகுப்பைக் காணலாம்.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1200 முதல் 1300 மில்லி மீட்டர் வரை மழை பொழிகிறது. இது சென்னையின் ஒட்டுமொத்த மக்களுக்குமான தேவையைவிட 2 மடங்கு அதிகமாகும். இந்த நிலையில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் சென்னையின் நீர் ஆதாரங்களான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் வறண்டன. பிரச்னைகளை முன்னரே அறிந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அனைத்து கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பதை கட்டாயமாக்கினார். அதை தற்போதைய அரசு தொடர்ச்சியாக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து வருகிறது.

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தினால், 100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தளத்தின் மூலம் 78 ஆயிரம் லிட்டர் முதல் 1 லட்சத்து 30ஆயிரம் லிட்டர் வரை மழை நீரைச் சேமிக்க முடியும் என்கின்றனர், குடிநீர் வாரிய அதிகாரிகள். தனக்கு சொந்தமான நிலத்தில் விழும் மழைநீரைகுழாய்கள் மற்றும் கால்வாய்கள் மூலம் கொண்டு, சென்று பூமிக்கடியில் விடுவதால் நீர்ப்பிரச்னை வரவில்லை என்கிறார் திரைப்பட தயாரிப்பாளர் கசாலி.

தமிழக அரசு பல நீராதாரங்களில் இருந்து சென்னை மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், மக்கள் தங்களின் இல்லங்களிலும் வணிக வளாகங்களிலும், அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டியை அமைத்து, முறையாக மழைநீரை சேமித்தால் மட்டுமே வருங்கால சந்ததியினருக்கு குடிநீர் எளிதில் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.

Exit mobile version