தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவமழை காரணமாகவும், மழைக்கு வாய்ப்பிருப்பதாக, வானிலை மையம் கூறியுள்ளது.
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும். அதே போல தென் தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. சென்னை அசோக்நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், பல்லாவரம், தாம்பரம்,பெருங்களத்தூரில் நல்ல மழை பெய்தது. திருவள்ளூர், திருத்தணி, பெரியகுப்பம், மணவாளநகர், ஈக்காடு, காக்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.