தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்துள்ள மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் மதியம் முதல் பரவலாக மிதமான மழை பெய்தது. விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் விதைப்பதற்காக உழவு பணிகளை முடித்து விட்டு மழையை எதிர்பார்த்து இருந்த நிலையில், இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி பகுதியில் காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில் , வானிலை திடீரென மாறி மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரமாக பெய்த மழையில் வெப்பம் தணிந்ததால் , பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான போத்தனூர், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ததால் விவாசயிகள் மற்றும் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுப்பகுதிகளான, முத்துப்பட்டி, அவனியாபுரம், பெருங்குடி, விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஒருமணி நேரத்துக்கும் மேலாக, காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்திருப்பதால், வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவுவதாக, பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.