ரயில் நிலையங்களில் நடைபெறும் குழந்தை கடத்தலை தடுக்க, தப்பாட்டம் இசைத்து பயணிகளிடையே ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை கொண்டு காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையிலும், ஒரு சில ரயில் நிலையங்களில், ஒன்றிரண்டு குழந்தை கடத்தல் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தென்னக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், நாகை ரயில் நிலையம் முன்பு தப்பாட்டம் இசைத்து பயணிகளிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ரயில் பயணத்தின்போது அழைத்துவரப்படும் இளம் சிறார்களை, பெற்றோர்கள் பாதுகாப்பாக ரயிலில் அழைத்து செல்ல வேண்டும் என்றும் ரயில் ஜன்னல் ஓரத்தில் பயணிக்கும் பெண்கள் நகைகளையும், உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலம் எடுத்துரைத்தனர். பின்னர் காரைக்காலில் இருந்து நாகைக்கு வந்த ரயில் பயணிகளிடம், ஓடும் ரயிலில் ஏறக்கூடாது, படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ரயில் பயணிகளுக்கு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.