ரயில் நிலைய பெண் அதிகாரியை தாக்கிய மர்ம நபரை கைது செய்தது ரயில்வே காவல்துறை

கோவையில், ரயில் நிலைய அதிகாரியை தாக்கிய மர்ம நபரை ரயில்வே காவல்துறையினர், தனிக்குழு அமைத்து கைது செய்தனர்.

கோவை மாவட்டம் எட்டிமடை ரயில் நிலையத்தில், அதிகாரியாக பணிபுரிந்து வரும் அஞ்சனா, கடந்த 29-ம் தேதி இரவுப் பணியில் இருந்தார். நள்ளிரவு 1 மணியளவில், 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர், ரயில் குறித்து விசாரிப்பதுபோல், திடீரென அறைக்குள் நுழைந்து, அஞ்சனாவை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அஞ்சனா சத்தம் போட்டதால், அறையிலிருந்து தப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதனடிப்படையில், ரயில்வே காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு தன்னிப்படை அமைத்து தேடி வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 மணியளவில், எட்டிமடை ரயில்நிலையம் அருகே சந்தேகிக்கும் படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர், கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது குட்டி என்பதும், அஞ்சனாவை தாக்கியது அவர்தான் எனவும் ஒப்புக்கொண்டார். பின்னர் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Exit mobile version