ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் சரக்கு ரயில் போக்குவரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை இந்திய ரயில்வே 82 புள்ளி 27 மில்லியன் டன் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்றுள்ளது. இது, ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஏற்றிச்சென்ற 65 புள்ளி14 மில்லியன் டன்களுடன் ஒப்பிடும்போது 25 சதவீதம் அதிகமென ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 9ம் தேதி வரை, இந்திய ரயில்வே தடையில்லா 24 மணி நேர ரயில் சேவைகளின் மூலம் மொத்தம் 175 புள்ளி 46 மில்லியன் டன் அத்தியாவசியப் பொருள்களை நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 96 வழித்தடங்களில் சரக்கு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் கூடுதல் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பொருட்களை கொண்டு செல்ல ஏதுவான வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.