வேலூர் அருகே திமுக பிரமுகருக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற வேட்பாளருமான கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. சுமார் 11 கோடி ரூபாய் பணம் திமுக பிரமுகர்களின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் வழங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, கனரா வங்கி மேலாளர் தயாநிதி வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல் விரிஞ்சிபுரம் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் பாலு என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. கதிர் ஆனந்த் கணக்கு வைத்துள்ளதாக கூறப்படும் காட்பாடி கனரா வங்கியில் 9 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் திருப்பத்தூர் பகுதி திமுக பிரமுகரும், தொழிலதிபருமான மண்ணப்பனுக்கு சொந்தமான விஜயா மெஷினரி, விஜயா எலக்ட்ரிக்கல்ஸ், விஜய சரவண திருமண மண்டபம், விஜயா கேலக்ஜி ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடைபெற்றதில், பணம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.