மேற்குவங்க மாநிலம் மால்டாவில் ராகுல் காந்தியின் பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பாடுகள் சரிவர செய்யப்படாததை கண்டித்து, பொதுமக்கள் சேர்களை தூக்கியெறிந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களவை தேர்தலையொட்டி மேற்குவங்க மாநிலம் மால்டாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கடுமையான வெயிலுக்கிடையே பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பொதுமக்கள், உட்கார கூட இடம் இல்லாமல் கடுமையான அவதிக்குள்ளாகினர். இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த சேர்களை எடுத்து தூக்கி வீசினர். இதனால் கூட்ட அரங்கில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர்.