ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. இந்நிலையில், டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. அதில், நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் 2 அரைசதங்கள் உட்பட 224 ரன்கள் குவித்த கே.எல். ராகுல் தரவரிசையில் முதன்முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தில் உள்ளார். கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 9-வது இடத்திலேயே நீடிக்கிறார். ஷ்ரேயஸ் ஐயர் 63 இடங்கள் முன்னேறி 55-வது இடத்தைப் பிடித்துள்ளார். மணீஷ் பாண்டே 12 இடங்கள் முன்னேறி 58-வது இடத்தைப் பிடித்துள்ளார்.பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அஸாம் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகிறார்.
பந்துவீச்சு தரவரிசையிலும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். பூம்ரா 26 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். சாஹல் 10 இடங்கள் முன்னேற்றம் கண்டு 30-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தத் தொடரில் 8 விக்கெட்டுகளைப் கைப்பற்றிய ஷர்துல் தாக்கூர் 57-வது இடத்தை அடைந்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 34-வது இடத்துக்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர். பந்துவீச்சு தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.