ராகுல்காந்தி தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது கல்வி சான்றிதழ் குறித்த ஆவணங்களில் ராகுல் வின்சி என குறிப்பிட்டுள்ளது பற்றி பாஜக செய்திதொடர்பாளர் ஜி.வி.நரசிம்மராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
17- வது நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதியிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அமேதியில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், கல்விச் சான்றிதழில் ராகுல் வின்சி என தனது பெயரை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள பாஜக செய்திதொடர்பாளர் ஜி.வி.நரசிம்மராவ், ராகுல் இந்திய குடிமகன் இல்லை என்பது நிரூபணம் ஆவதாகவும், அவரை தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்திய அரசியல் சாசனம் பிரிவு 9-ன்படி இரட்டை குடியுரிமையை இந்திய அரசு அனுமதிப்பதில்லை என குறிப்பிட்டுள்ள ஜி.வி.நரசிம்மராவ் நாட்டு மக்களுக்கு ராகுல்காந்தி இந்த விவகாரத்தில் பதில் சொல்ல கடமை பட்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.