46வது வயதில் அடியெடுத்து வைக்கும் ராகுல் டிராவிட்

இந்தியாவின் தடுப்பு சுவர் என செல்லமாக அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டுக்கு இன்று பிறந்த நாள்… 46 வது வயதில் அடியெடுத்து வைக்கும் டிராவிட் தொடர்பான சிறிய செய்தி தொகுப்பை தற்போது காணலாம்….

1990களின் பிற்பகுதியிலும், 2000 முதல் 2011 வரையிலும் இந்திய அணி தடுமாற்றத்தை சந்திக்கும் சூழலில், ராகுல் டிராவிட் இன்னமும் களத்தில் இருக்கிறார் என்ற நம்பிக்கை அனைத்து ரசிகர்கள் மனதிலும் இருக்கும்….

போட்டியின் போது, இந்திய அணியை, நட்சத்திர பேட்ஸ்மேன்கள், அதிரடி ஆட்டக்காரர்கள் என அனைவரும் கைவிட்ட நிலையிலும், கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும் ராகுல் டிராவிட்டின் அந்த அசாத்திய திறமையே அதற்கு காரணம்.

1996-ம் ஆண்டு இந்திய அணியின் 11 வீரர்களில் ஒருவராக களமிறங்கிய ராகுல் டிராவிட், தனது அபார திறமையால் 2005-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 சதங்கள், 63 அரைசதங்களுடன் 13 ஆயிரத்து 288 ரன்களையும் அவர் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 270 ரன்கள் குவித்துள்ள டிராவிட், 210 கேட்ச்களை பிடித்தும் சாதனை படைத்துள்ளார்.

344 ஒருநாள் போட்டியில் விளையாடி 10 ஆயிரத்து 889 ரன்கள் குவித்துள்ள டிராவிட், தனது அபாரமான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணியில் 2012-ம் ஆண்டு வரை 12 வருடங்கள் விளையாடினார்.

ஒரு நாள் போட்டியை விட டெஸ்ட் போட்டியில் நிலைத்து நின்று விளையாடும் திறமைப் படைத்த டிராவிட் இந்திய கிரிக்கெட்டின் தடுப்பு சுவர் என செல்லமாக அழைக்கப்பட்டார்.

தற்போது 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராகவும், இந்தியா ‘ஏ’ அணியின் பயிற்சியாளராகவும் உள்ளார். 2004ல் ஐசிசியின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற விருது பெற்ற டிராவிட்டுக்கு, 2018 க்கான Hall of Fame என்ற விருதையும் ஐசிசி வழங்கி கவுரவித்துள்ளது.

இந்நிலையில் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடும் ராகுல் டிராவிட்டுக்கு நியூஸ்ஜெ தொலைக்காட்சி சார்பில் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்….

Exit mobile version