பதவி விலகும் முடிவில் ராகுல் உறுதி: குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதால் இடைக்கால தலைவரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. குறிப்பாக 2வது முறையாக அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்ததை அக்கட்சியின் காரிய கமிட்டி நிராகரித்தது. இருப்பினும் தனது முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சிக்கான இடைக்கால தலைவரை தேர்வு செய்வதிலும் குழப்பம் நீடிக்கிறது. நேரு குடும்பத்தை சாராதவர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என ராகுல் காந்தி நிபந்தனை விதித்திருப்பதால் மூத்த தலைவர் ஒருவர் இடைக்கால தலைவராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது. ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை அறிவித்து இருவாரங்களுக்கு மேலாகியும் இடைக்கால காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version