பிரதமர் மோடியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.
ரபேல் போர்விமானம் குறித்த ஒப்பந்தத்தில் முறைகேட்டில் பிரதமர் தலைமையிலான பாஜக அரசு ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் தொடர் விமர்சனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலில் தங்களது பிரசாரங்களில் ரபேல் சர்ச்சையை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல், தன்னை காவலாளியாக மோடி கூறிக்கொள்வதை சுட்டிக்காட்டி, அவர் நாட்டின் காவலாளி அல்ல என்றும் திருடன் என்றும் கடுமையான வார்த்தைகளால் சாடினார்.
இந்நிலையில், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர் குறித்து இத்தகைய அவதூறான விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மோடி குறித்த தனது விமர்சனத்திற்கு ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். தான் அத்தகைய கடுமையான வார்த்தைகளை பிரயோகித்திருக்கக் கூடாது என்றும் அவர் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.