விமானப்படையில் ரஃபேல் இணைப்பு : எல்லையில் சீண்டும் சீனாவுக்கு எச்சரிக்கை!

இந்திய விமானப் படைக்கு வலுசேர்க்கும் விதமாக ரபேல் போர் விமானங்கள் சர்வ மத பிரதார்த்தனையுடன் விமானப் படையில் முறைப்படி இணைக்கப்பட்டன.

இந்தியாவின் இறையாண்மையை சீண்டுபவர்களுக்கு, ரஃபேல் போர் விமானம் ஒரு வலிமையான செய்தி தந்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் டாஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையின் 17-வது பிரிவில் இணைக்கும் நிகழ்ச்சி ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற்றது. சர்வ மத பிரார்த்தனை நடத்தப்பட்டு, ரஃபேல் விமானங்கள் விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து விண்ணில் சீறிப்பாய்ந்த ரஃபேல், SU-30, ஜாக்குவார் உள்ளிட்ட போர் விமானங்கள் வானில் வர்ண ஜாலங்கள் காட்டின. விண்ணில்போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நிகழ்ச்சிய சாகசம், பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

சாகசம் முடிந்து தரையிறங்கிய ரஃபேல் விமானங்கள் மீது, இருபுறமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் எல்லையை பாதுகாக்க தற்போதைய சூழலில் ரஃபேல் விமானத்தின் தேவை இன்றியமையாதது என்றார். இந்திய விமானப்படையில் ரஃபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டிருப்பது உலகிற்கே மிகப்பெரிய செய்தி எனக் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், குறிப்பாக, இந்தியாவின் இறையாண்மையை சீண்டுபவர்களுக்கு ரஃபேல் போர் விமானம் ஒரு வலிமையான செய்தி தந்துள்ளதாக சீனாவை மறைமுகமாக சாடினார்.

பின்னர் பேசிய பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி, இந்திய – பிரான்ஸ் பாதுகாப்பு உறவில், புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாகவும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அங்கம் வகிக்க, பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் குறிப்பிட்டார். நிகழ்ச்சியின் இறுதியில் பிளாரன்ஸ் பார்லிக்கு, ராஜ்நாத் சிங் நினைவுப் பரிசு வழங்கினார். பாதுகாப்பு படைகளுக்கான தலைவர் பிபின் ராவத், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதூரியா, உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Exit mobile version