ரஃபேல் போர் விமான ஊழல் புகார் குறித்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015 ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த போது, டசால்ட் நிறுவனத்துடன் 36 ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டதிலும் ஊழல் நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், ரஃபேல் ஒப்பந்த பேரத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ரஃபேல் போர் விமானம் குறித்த அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தது. மேலும் வெறும் அனுமானத்தினை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.