ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நாளை அறிக்கை?

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மத்திய தணிக்கை துறையின் அறிக்கை நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 2016 ம் ஆண்டு பிரதமர் மோடி, பிரான்சில் சுற்றுப்பயணம் செய்த போது ஒப்பந்தம் கையெழுத்தானது. முன்னதாக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 126 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை பாஜக அரசு ரத்து செய்திருந்தது. இந்தநிலையில் பாஜக அரசு செய்து கொண்ட ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்தநிலையில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய தணிக்கை துறையின் அறிக்கை நாளை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் முன்வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014 ம் ஆண்டு மத்திய தணிக்கை துறை 2 ஜி அலைக்கற்றை குறித்து அறிக்கை அளித்த பின்னரே அந்த வழக்கு பூதாகரமானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version