ராதாபுரம் தேர்தல் வழக்கு: மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிப்பதற்கான தடையை நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்துத் திமுக வேட்பாளர் அப்பாவு தொடுத்த வழக்கில், அஞ்சல் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளுக்கு வந்த மின்னணு வாக்கு இயந்திரங்களையும் மறு வாக்கு எண்ணிக்கைக்கு ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து இன்பதுரை தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறு வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க அக்டோபர் 23 ஆம் தேதி வரை தடை விதித்தது. இன்பதுரையின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தடை உத்தரவு நவம்பர் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

மறு வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிப்பதற்கான தடை இன்றுடன் முடியும் நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தடை உத்தரவை நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டித்ததுடன் விசாரணையும் அன்றைய தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

Exit mobile version