ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு

ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை இம்மாதம் 29ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றார். தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என திமுக வேட்பாளர் அப்பாவு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து சர்ச்சைக்குரிய வாக்குகள் கடந்த 4-ந் தேதி உயர்நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் எண்ணப்பட்டது.

இதற்கிடையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அதிமுக வேட்பாளர் இன்பதுரை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் வாக்குகளின் மறு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ராதாபுரத்தில் பதிவான வாக்குகளின் மறு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடை, வரும் 29-ம் தேதி வரை நீட்டிக்கப் படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கின் இறுதி விசாரணை குறித்து வரும் 29-ம் தேதி முடிவு செய்யப்படும் எனவும், உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Exit mobile version