காலத்தை வென்ற கதைக்காரன் – புதுமைப்பித்தன்

என்னமோ கற்பு கற்பு என்கிறீர்களே? இதுதானம்மா பொன்னகரம். இப்படி மொத்த கதையையும் ஒற்றை முடிப்பில் சொல்லி முடிக்கும் ஒரு எழுத்தாளன். 

இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம்.

குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா?

மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் – இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை.

இலக்கியங்கள் குறித்து இப்படி ஒரு பார்வையை கொண்டிருந்தவர்கள் எழுத்துலகில் ஏராளமென்றாலும், அந்த பார்வையை தன் பாத்திரங்களையும் பார்க்க வைத்த படைப்பாளி என்றால் அது புதுமைப்பித்தனையே சாரும்.

சொ.வி, ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், கபாலி, சுக்ராச்சாரி மற்றும் இரவல் விசிறிமடிப்பு. புதுமைப்பித்தன் என்ற பெயரே அவருக்குப் பிடித்தமானதாக இருந்தது. வேலூர் வே. கந்தசாமிப் பிள்ளை என்ற பெயரில் கவிதைகளும், நந்தன் என்ற பெயரில் தழுவல் கதைகளையும் எழுதிவந்த இந்த காலத்தை வென்ற கதைக்காரனை காலம் வென்ற தினம் இன்று.

ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகளில் வெறும் 40 லிருந்து 50 சிறுகதைகள் தான் இவர் காலத்திலேயே வெளியாயின என்றால் நம்ப முடியவில்லைதான். ஆனால் எழுத்துலகில் பலருக்கும் ஆதர்சனமாக இருக்கும் கதைக்காரன் இந்த புதுமைப்பித்தன்.

1948 ல் காலமானவர்கள் என்று கேட்டால் முதல் பெயர் மகாத்மா காந்தி என்போம். வேறு, அடுத்து ஒரு பெயரை சொல்லவேண்டுமெண்றால் புதுமைப்பித்தன் அதற்கு பொருந்தும் ஒருவர். இவருக்கும் காந்தி என்ற பெயருக்கும் இருக்கும் தொடர்பு என்றால் அது 1933ல் இவரது முதல் சிறுகதை “குலாப்ஜாமூன் காதல்” காந்தி பத்திரிக்கையில் வெளியானதுதான்.

சற்றேறக்குறைய 1920களின் பிற்பகுதியில் தொடங்கும் அவரது படைப்புக் காலம் 1940களில் அவரது மரணத்தோடு முடிவடைகிறது. மரணத்தை நோக்கியோ அல்லது விளக்கும் வகையிலோ கதை எழுதுவது ஒரு பாணி என்றால் மரணத்தை குறியீடாகவே கொண்டு கதை எழுதுதல் புதுமைப்பித்தனின் தனிச்சிறப்பு.

காமவல்லி, அவ்வை போன்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள நம் புதுமைப்பித்தன், “பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்” -ஐத் துவங்கி வசந்தவல்லி என்ற படத்தைத் தயாரிக்கவும் செய்தார். கலைவடிவங்களில் எல்லாவற்றையும் விட கதைகள் இவருக்கு அதிகம் கைகொடுத்தன.

1906 ம் ஆண்டு ஏப்ரல் 25 ம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்த இந்த கதைசொல்லி 1948ம் ஆண்டு தான் கதைசொல்வதை நிறுத்திக்கொண்ட தினம் இன்று. கதைகளுக்கூடாக, கதைசொல்லும் நெறிகளுக்கூடாக வாழ்ந்துகொண்டே இருக்கும் புதுமைப்பித்தன் என்றும் தமிழுலகம் கொண்டாடிக்கொண்டே இருக்கும்.

Exit mobile version