ஜெர்மனியில் 85 பேரைக் கொன்றதாக ஒப்புக் கொண்ட தொடர் கொலையாளி நீல்ஸ் ஹோகல் (Niels Hoegel) என்பவருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு மருத்துவ மனையில் ஆண் செவிலியராக வேலை பார்த்த நீல்ஸ் ஹோகல் அங்கு சிகிச்சைக்கு வந்திருந்த, நோயாளிகளை ஈவிரக்கமின்றி கொன்றது உலகெங்கும் பலத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இவர் உண்மையில் 200க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கலாம் என்று ஜெர்மன் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டால் கடந்த 50 ஆண்டுகளில் உலகம் கண்ட மிக மோசமான கொலையாளியாக இவர் கருதப்படுவார்.
இவரைப் போல சமீப காலத்தில் உலக மக்கள்வயிற்றில் புளியைக் கரைத்த தொடர் கொலையாளிகள் சிலரைப் பற்றிப் இத் தொகுப்பில் பார்ப்போம்….
கடந்த 2018 டிசம்பரில் செர்பியாவின் 54 வயதான முன்னாள் காவல் அதிகாரி மிகையீல் பாப்கோவ் (Mikhail Popkov) 56 பேரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார். இந்தத் தீர்ப்பு வந்த போது அவர் 22 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளியாக சிறையில் இருந்தார் என்பது கூடுதல் தகவல். 1992 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் பல பெண்களை கைக் கோடாரி, சுத்தியல் போன்ற பயங்கர ஆயுதங்களால் இவர் கொன்றிருந்தார்.
கடந்த 2018 நவம்பரில் சாமுவேல் லிட்டில் (Samuel Little) என்ற 78 வயதான அமெரிக்க முன்னாள் குத்துச் சண்டை வீரர், தான் 90க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இந்தக் கொலைகள் 1970 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் செய்யப்பட்டவை. இப்படியாகக் கொல்லப்பட்டவர்களில் பலர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் விலைமாதர்களாக இருந்தனர். அந்த 90 பேரில் 40 பேரின் அடையாளம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது, பிறர் யார் என்று இன்றும் புலனாய்வு நடந்து வருகிறது.
கடந்த 2007ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் பிச்சுஸ்கின் (Alexander Pichushkin) என்ற 33 வயதான ரஷ்யர் 48 பேரைக் கொன்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். இந்த கொலைகள் அனைத்தையும் அவர் 2002 முதல் 2006க்கு இடைப்பட்ட 4 ஆண்டுகளில் செய்திருந்தார். தனது சதுரங்க ஆட்டப் பலகையில் உள்ள 64 கட்டங்களுக்கும் 64 பேரைக் கொல்ல திட்டமிட்டு இருந்ததாக இவர் சொன்னபோது ரஷ்ய மக்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். பொதுப் பூங்காக்களில் குடிபோதையில் உள்ள முதியவர்களே இந்தக் கொலையாளியின் பிரதான இலக்காக இருந்தனர்.
இது போல 2004ல் 35 வயதான யாங் சின்ஹாய் (Yang Xinhai) என்ற சீனர், மக்களின் வீடுகளுக்குள் புகுந்து 67 பேரைக் கொன்றதாக உறுதி செய்யப்பட்டது.
2003ல் டிரக்குகளுக்கு வண்ணம் அடிக்கும் பெயிண்டராக வேலை பார்த்து வந்த 54 வயதான அமெரிக்கர் கேரி ரிக்வே (Gary Ridgway) என்பவர் 48க்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்ததும் உறுதி செய்யப்பட்டது.
எந்த முன்விரோதமும் இல்லாத நிலையிலும் தொடர் கொலைகளில் ஈடுபடும் இவர்களை ஒருவகை மனநல பாதிப்புக்கு உள்ளானவர்களாகவே மனோதத்துவ இயல் கருதுகிறது. மனிதர்களாக அல்லாமல் மனித வடிவத்தில் உள்ள மிருகங்களாகவே இந்தத் தொடர் கொலையாளிகள் பார்க்கப்படுகின்றனர்.