வங்கக் கடலில் உருவான புரெவி புயல் இலங்கையில் நேற்றிரவு கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் இலங்கையின் திரிகோணமலையில் நேற்றிரவு 10:30 மணி முதல் 11:30 மணியளவில் கரையை கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திரிகோணமலைக்கு வடக்கே கரையை கடந்துள்ள புரெவி புயல், பாம்பன் – கன்னியாகுமரிக்கு இடையே இன்றிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி – பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரெவி புயலால் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.