புரட்டாசி அமாவாசையையொட்டி, சதுரகிரி மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள கோயிலுக்கு, அமாவாசை, பெளர்ணமி மற்றும் பிரதோஷம் என 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்குகிறது.
அதன்படி, இன்று புரட்டாசி அமாவாசையையொட்டி, சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினரும், கோயில் ஊழியர்களும் திணறி வருகின்றனர்.
இதனிடையே, ராமேஸ்வரம் கடலில் புனித நீராட குவிந்த பக்தர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். அமாவாசையையொட்டி, தர்ப்பணம் கொடுக்கவும், கடலில் புனித நீராடவும், வெளிமாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் ராமேஸ்வரத்தில் குவிந்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால், காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து பக்தர்களை திருப்பி அனுப்பினர். தடை அறிவிப்பு குறித்து தெரியாததால், ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் சென்று புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.