ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் அணி திரில் வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சகாரியா பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மயங்க் அகர்வால் 14 ரன்னில் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கே.எல்.ராகுல் 30 வது பந்தில் அரைசதம் அடிக்க, தீபக் ஹூடா 20 வது பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் கடைசி ஓவரில் 91 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.

222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மணன் வோக்ரா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பென் ஸ்டோக்ஸ் டக்அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து மணன் வோக்ரா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஜோடி அதிரடி காட்டியது. ஜோஸ் பட்லர் 25 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே 23 ரன்களில் வெளியேறினர்.

வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டநிலையில் கடைசி ஒவரில் சஞ்சு சாம்சன் 119 ரன்களில் ஆட்டமிழந்தார்.முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 217 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றிபெற்றது.

Exit mobile version