பஞ்சாப் காங்கிரஸில் பஞ்சாயத்து ; காலியாகும் காங்கிரஸ் கூடாரம்…

அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்குள், பஞ்சாப்பில் அம்ரீந்தர் சிங், நவ்ஜோத் சித்து என அடுத்தடுத்து பதவி விலகலால் காங்கிரஸின் கூடாரம் காலியாகிறது.

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே நீண்ட நாட்களாக புகைச்சல் நிலவி வருகிறது.

அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி, சித்துவுக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கி காங்கிரஸ் தலைமை அழகு பார்த்ததால், கட்சி மேலிடம் மீது அதிருப்தியடைந்த அமரீந்தர் சிங், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் தொடர்ச்சியாக சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தியால், டெல்லியில் முகாமிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

அமரீந்தர் சிங் பாஜக பக்கம் போவதை தடுப்பதற்காக, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் ராஜினாமா செய்துள்ளார்.

அவருக்கு ஆதரவாக பஞ்சாப் அமைச்சர் ரஸியா சுல்தானா பதவி விலகியுள்ளார்.

சித்து பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து நிலையற்ற மனநிலையை கொண்டவர் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சித்து தகுதியானவர் இல்லை என்று தாம் அப்போதே கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலையும் அவர் மறுத்துள்ளார்.

அம்ரீந்தர் சிங், நவ்ஜோத் சித்து என அடுத்தடுத்து பதவி விலகலால் பஞ்சாப்பில் காங்கிரஸின் கூடாரம் காலியாகிறது.

Exit mobile version