ஆன்லைனில் ஆடர் செய்யப்பட்ட பொருளுக்கு பம்பர் பரிசு விழுந்ததாக கூறியும், பேராசைப் படாமல் செயல்பட்ட சுரேஷ் என்பவர், காவல்துறையினரின் உதவியுடன் ஏமாறாமல் தப்பினார்.
சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த சுரேஷ், கடந்த 28ம் தேதி ஆன்லைன் ஷாப்பிங் மூலம் 350 ரூபாய் மதிப்புள்ள போர்வையை ஆடர் செய்துள்ளார். போர்வை வீட்டிற்கு டெலிவரி ஆகி 20 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், திடீரென சுரேஷின் செல்போனிற்கு, டெலிவரி செய்யப்பட்ட போர்வைக்கு, 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கார் பம்பர் பரிசாக விழுந்துள்ளதாகவும், அதனை பெற்றுக் கொள்ள வேண்டுமெனில், 12 ஆயிரத்து 800 ரூபாய் டேக்ஸ் கட்ட வேண்டும் என்றும், SHOPCLUES.COM நிறுவனத்தின் உதவி மேலாளர் சுஜித் பேசுவதாகவும் தெரிவித்து, ஒருவர் பேசியுள்ளார். மேலும், இதனை சுரேஷ் நம்புவதற்காக, தனியார் நிறுவன அடையாள அட்டை மற்றும் பரிசு பொருளான காரின் புகைப்படத்தையும் அனுப்பியுள்ளார்.
ஆனால், சந்தேகமடைந்த சுரேஷ், இது குறித்து செம்மஞ்சேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஐயப்பன், கார்த்திகேயன் ஆகிய இருவரிடம் கூறினார். பின்னர் குறிப்பிட்ட எண்ணிற்கு ஆய்வாளர் அழைத்து பேசிய போது, சுதாரித்துக்கொண்ட மர்ம நபர், போனை துண்டித்து விட்டு, ஸ்சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார். ஆசை வார்த்தைக்கு மயங்காமல் சுரேஷ் விழிப்புணர்வுடன் இருந்ததால், காவல்துறையினரின் உதவியுடன் ஏமாறாமல் தப்பினார்.