புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.
ஜெகதாபட்டிணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இன்று காலை 80 விசைப்படகுகளில் 250க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் நெடுந்தீவு அருகே இந்திய எல்லை பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், விஜயேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறினர். பின்னர் அதில் இருந்த ராமு, விஜயேந்திரன், ஜேசு, சின்னையன் உள்ளிட்ட 5 மீனவர்களை சிறைப்பிடித்த அவர்கள், விசைப்படகையும் கொண்டு சென்றனர். காங்கேசன் துறைமுகத்தில் மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.