புதுச்சேரி சபாநாயகர் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அவையில் எடுத்துக் கொள்ளாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு முதல் அமைச்சர் நாராயணசாமி பதிலளித்துப் பேசினார். அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அவையில் எடுத்துக் கொள்வது குறித்துக் கேள்வி எழுப்பினார். இதற்கு அரசு தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இல்லாததால் பேரவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்குப் பரபரப்பு நிலவியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் அன்பழகன், எதிர்க்கட்சிகள் கொடுத்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எடுத்துக் கொள்வதற்கான தேதியை சபாநாயகர் அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.