தனியார் பங்களிப்போடு புதிய சொகுசு பேருந்துகளை இயக்கும் முடிவை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என, போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி அரசு சார்பில் செயல்பட்டு வரும் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் மூலம் 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த கழகம் சிறப்பாக செயல்பட்டு புதுச்சேரி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நன்மதிப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தனியார் பங்களிப்போடு புதுச்சேரி முதல் சென்னை ஈசிஆர் வரை சொகுசு பேருந்துகளை இயக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டால் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்திற்கு 40% வரை நஷ்டம் ஏற்படும் என்றும் இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், பி.ஆர்.டி.சி ஊழியர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.