புதுச்சேரியில் சமுதாய கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அரசு கல்லூரிகளுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என்றும் சமுதாய கல்லூரிகளுக்கு நிறைவேற்றப்படாது என்றும் அரசு முடிவெடுத்தது. அரசின் இந்த முடிவு பாரபட்சமானது என தெரிவித்து அங்குள்ள 18 சமுதாய கல்லூரிகளில் பணிபுரியும் 4 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கடந்த 18ஆம் தேதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்பாக கடந்த 24ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து கடந்த 11 நாட்களாக போராட்டம் நீடித்தது.
இந்நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனும் கலந்து கொண்டார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அரசுக் கல்லூரிகளுக்கு ஊதியக்குழு அமல்படுத்தும் அன்றே சமுதாய கல்லூரிகளுக்கும் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பவுள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படாதவகையில், சனிக்கிழமைகளில் பாடம் நடத்தப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர்.