புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை மத்திய அரசு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது.
இவர்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்த நிலையில், ஆளுநரே நேரடியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் எம்.எல்.ஏக்கள் நியமனம் தொடர்பாக, தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் 3 எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும் என உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், மத்திய அரசு நியமித்த 3 எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் நியமன விவகாரத்தில் மாநில அரசு தலையிட தேவையில்லை எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநருக்கு எம்.எல்.எக்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.