தமிழகத்தின் மீது தொடர்ந்து அன்பு வைத்திருப்பவர் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் 2 ஆண்டு பணியை ஆவணப்படுத்தும் புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் தயாரான புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட அதனை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தின் மீது தொடர்ந்து அன்பு வைத்திருப்பவர் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு என்றார். உழைப்பே உயர்வு என்பதற்கு, வெங்கையா நாயுடுவின் வாழ்க்கையே உதாரணம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி புகழாரம் சூட்டினார். தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவியை பெற்று தருபவர் வெங்கையா நாயுடு என முதலமைச்சர் தெரிவித்தார்.