தமிழ் மொழியின் ஆற்றலை உணர்ந்து கொண்டால், தமிழர்கள் இன்னும் பெரிய உயரங்களை அடையலாம் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை, நந்தனத்தில் 43-ஆவது புத்தக காட்சி, பல லட்சம் புத்தகங்களுடன் நடைபெற்று வருகிறது. இதில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எழுதிய விண்ணும் மண்ணும் என்ற புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புத்தகத்தை வெளியிட்டார். அதன்பிறகு பேசிய அவர், தொழில் நுட்ப வளர்ச்சிதான் ஒரு நாட்டை முன்னேற்ற முடியும். தொழில் நுட்பத்தை மேம்படுத்த புதிய சிந்தனைகள் கொண்ட இளைஞர்கள் தேவை. அதுபோன்ற இளைஞர்களை உருவாக்க பிள்ளைகளிடம் படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றார். விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியபோது, இன்றைய இந்தியாவின் முகவரிகளாக தமிழர்களே உள்ளனர். காரணம், மிகப்பெரிய உயரங்களைத் தொட வேண்டும் என வள்ளுவம் தமிழர்களுக்குக் கற்பித்துள்ளது. தமிழ் மொழியின் ஆற்றலை உணர்ந்து கொண்டால், தமிழர்கள் இன்னும் அதிக உயரங்களைத் தொட முடியும் என்று தெரிவித்தார். இந்த விழாவில் விஞ்ஞானி டில்லி பாபுவின், விஞ்ஞானி டில்லி பாபு எழுதி உள்ள, அடுத்த கலாம் என்ற புத்தகத்தின் அறிமுகமும் இடம்பெற்றது.