ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு பணிக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தினால் நடத்தப்படும் 7வது பொருளாதார கணக்கெடுப்பு விரைவில் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ளது. பொருளாதாரத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் இந்த பொருளாதார கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்மூலம் நிறுவனங்களின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு, உரிமையாளர்களின் வகை மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் அரசுக்கு கிடைக்க பெறுகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் மற்றும் சென்னை மாநகராட்சி அளவிலும் என மூன்று நிலைகளுக்கு தனி தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு தலைமை செயலாளர் தலைவராகவும், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், சென்னை மாவட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் தலைவராகவும் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு செயலாக்கத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுனந்தன் வெளியிட்டார்.