பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2, பொதுத்தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க 37 மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வுக் கண்காணிப்பாளர்களை நியமித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் அரசாணை வெளியிட்டுள்ளார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ம் தேதியும், பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 4-ம் தேதியும் தொடங்க இருக்க இருக்கிறது. அதேபோல் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 27-ம் தேதி தொடங்க இருக்கிறது. பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாத வகையில் கண்காணிக்க 37 மாவட்டங்களுக்கும் மாவட்ட பொதுத் தேர்வுக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி, பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் திருவளர்ச்செல்வி ஆகியோர் சென்னை மாவட்டத்துக்கு பொதுத்தேர்வு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்கக இயக்குநர் பழனிசாமி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்,தங்களது பணிகளைத் தொடங்குவார்கள் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் அரசாணையில் குறிப்பிட்டுள்ளார்.