உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2.31 லட்சம் வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 7-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மாவட்டங்களில் உள்ள 91,975 பதவிகளுக்கு 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் பரிசீலனைக்குப் பிறகு 3,643 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 48,891 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் திரும்ப பெற்றனர். 18,570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து, 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளார்கள் இறுதிப் போட்டியில் உள்ளனர் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 898 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான தேர்தலில் 35,611 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 5,067 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 22,776 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2,605 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version