ஏழே மாதத்தில் 50 சதவீத வாக்குகளை இழந்த திமுக

2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களை கைப்பற்றிய திமுக, உள்ளாட்சித் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 7 மாதங்களில் திமுகவின் வாக்கு சதவிகிதம் பாதிக்கு மேல் குறைந்துள்ளதை, தற்போதைய முடிவுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

தமிழகத்தில் கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான தி.மு.க மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக அணியில் இடம் பெற்றன. திமுக-வின் இந்த மெகா கூட்டணி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. அந்த மெகா வெற்றிக்கு, தி.மு.க-வின் தனிப்பட்ட செல்வாக்குதான் காரணம் என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அப்போது பிரச்சாரம் செய்தன.

அந்த நேரத்தில், தி.மு.க பெற்ற வெற்றி குறித்து கருத்துத் தெரிவித்த, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.கவின் வெற்றிக்கு அந்தக் கட்சியின் தனிப்பட்ட செல்வாக்கு காரணம் அல்ல… திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு மீது சொன்ன தவறான குற்றச்சாட்டுகள், மக்களுக்குக் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளே காரணம் என்று தெளிவுபடுத்தினார்.

தமிழக முதல்வரின் அந்தக் கருத்து உண்மையானது என்பதை, அடுத்தடுத்து தமிழகம் சந்தித்து வரும் தேர்தல்கள் தொடர்ந்து நிரூபிக்கின்றன. குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து  தமிழகத்தின் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அப்போது இடைத்தேர்தல் நடைபெற்றது.  நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளோடு சேர்த்தே, 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியானது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் திமுக-வுக்கு சாதகமாக இருந்ததுபோல், 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் திமுக-வுக்கு சாதகமாக இருக்கவில்லை. அவை வேறு மாதிரியாக வெளிவந்தன.

நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களைப் பெற்ற தி.மு.க, 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் வெறும் 13 இடங்களை மட்டுமே பிடித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் 1 இடத்தில் மட்டும் வெற்றி பெற்றிருந்த அ.தி.மு.க, 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் 9 இடங்களைக் கைப்பற்றி இருந்தது. இந்த முரண்பாட்டை பல அரசியல் நோக்கர்கள் கவனித்து, அ.தி.மு.கவின் பலம் மற்றும் தி.மு.க.வின் பலவீனத்தை அப்போதே பட்டியலிட்டு இருந்தனர்.

இதையடுத்து, சமீபத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், இரண்டு தொகுதிகளையும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அதிமுக-வே கைப்பற்றியது. தி.மு.க படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. அதன் முடிவுகளும் தி.மு.க-வுக்கு சாதகமாக அமையவில்லை. மாறாக, வாக்கு சதவீத அடிப்படையில் திமுக மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதையே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. உள்ளாட்சிகளில் 515 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கான தேர்தலில், 230-க்கும் மேற்பட்ட இடங்களை அதிமுக கைப்பற்றிவிட்டது. தி.மு.க வென்ற இடங்களிலும் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், 5 ஆயிரத்து 90 ஒன்றியக் கவுன்சிலர் பதவி இடங்களில், 2 ஆயிரத்து 163 இடங்களை அ.தி.மு.க கைப்பற்றிவிட்டது. முடிவு அறிவிக்கப்பட வேண்டிய பல இடங்களிலும் தொடர்ந்து அ.தி.மு.கவே முன்னணியில் உள்ளது. இது திமுக-வுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த ஏழே மாதத்தில், திமுக தனது வாக்கு வங்கியில் 50 சதவீதத்தை இழந்துள்ளதையே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகான அதிமுகவின் எழுச்சி மற்றும் திமுகவின் பின்னடைவைப் பொறுத்துக் கொள்ள முடியாத, தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், தேர்தல் வாக்கு எண்ணிக்கையைத் தடுப்பதற்காக நேற்றும் பல முயற்சிகளை மேற்கொண்டார். மதியமும், இரவிலும் நேரில் சென்று தமிழகத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமியைச் சந்தித்து முறையிட்டார். உயர் நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்து வாக்கு எண்ணிக்கையைத் தடுக்கப் பார்த்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் இதுபோன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகள், அந்தக் கட்சியின் செல்வாக்கை மேலும் மக்கள் மத்தியில் குறைக்கவே செய்யும் என்பததான் நிதர்சனமான உண்மை. 

Exit mobile version