கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடங்கும் என்று, அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கும் என்று அறிவித்தார். ஒரு பேருந்தில் 30 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், ஆட்டோவில் 2 பேரும், கார் டாக்ஸியில் 3 பேரும் பயணம் செய்யலாம் எனவும் எடியூரப்பா தெரிவித்தார். திரையரங்குகள், வணிக மால்களும் நாளை முதல் செயல்படலாம் என்று அறிவித்தார். மேலும், ரயில்கள் மாநிலத்திற்குள் மட்டுமே இயக்கப்படும் எனவும், பூங்காக்களில் கலை 7 முதல் 9 மணி வரையும், மாலை 5 முதல் 7 மணி வரையும் நடைபயிற்சிக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். குஜராத், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து, மே 31 வரை மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக எடியூரப்பா தெரிவித்தார்.