தனியார் பள்ளிகளை மிஞ்சி அசரவைக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

ஓசூரில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவித்து, பெற்றோரின் பாராட்டை பெறுகிறார் தலைமையாசிரியர் ஒருவர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களை மிஞ்சும் வகையில் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். தலைமையாசிரியராக குமார் அவர்கள் பணியில் இணைந்தபோது பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 5 பேர் மட்டுமே. தெலுங்கு மொழி கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வந்தநிலையில் தற்போது இந்த பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியாக பயிற்றுவிக்கப்பட்டு, 174 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். காலை 7 மணிக்கே பள்ளிக்கூடத்திற்கு வரும் தலைமையாசிரியர் குமார், அன்றைய நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை பட்டியலிட்டு, மாணவர்களை புன்னகையோடு வரவேற்கிறார். அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க முடிவெடுத்த தலைமையசிரியர் குமார் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், விளையாட்டு திடல், கட்டிடங்கள் மற்றும் வண்ண வகுப்பறைகள் என சக ஆசிரியர்களின் உதவியோடு பள்ளியின் உட்கட்டமைப்பை மாற்றி உள்ளார். தற்போது கிராம மக்களின் உதவியுடன் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு பள்ளி மேம்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறமை குறித்து அறிந்து அதற்கான பயிற்சிகளையும் வழங்கி வருகிறார். மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசி படிப்பதை அறிந்து சுற்று வட்டார பகுதியில் உள்ள மாணவர்கள் இப்பள்ளியில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். பெறும் ஊதியத்திற்காக கடமைக்கு பணியாற்றி நேரத்திற்கு வீடு செல்லும் ஆசிரியர்கள் மத்தியில் தலைமையாசிரியர் குமார், சிறந்த முன்னுதாரணமாக இருந்து வருகிறார் என்பதில் மிகையல்ல.

Exit mobile version