சென்னையில் மூடப்பட்டிருக்கும் அம்மா மினி கிளினிக்குகளை மீண்டும் திறக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் ஏழை மக்களின் வசதிக்காக அதிமுக ஆட்சியில், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை துவக்கி வைத்தார். பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பின், இந்த மினி கிளினிக்குகள் அனைத்துமே மூடப்பட்டதுடன், மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவப்படங்கள் அகற்றப்பட்டன.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால், மினி கிளினிக்குகளில் பணிபுரிந்த மருத்துவர்கள், கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்றதால், மினி க்ளினிகை தொடர்ந்து நடத்த முடியவில்லை என தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது தொற்று எண்ணிக்கை நாள்தோறும் ஐநூறுக்கும் கீழாக குறைந்துவிட்டதால், மூடப்பட்டிருக்கும் மினி க்ளினிக்குகளை திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.