பொது நிவாரண நிதி – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

கொரோனா பேரிடரையொட்டி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கிடைத்த நன்கொடை விவரங்களை அரசு வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளம் தொடர்பான வழக்கில், தமிழக அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், அரசின் நிதித்துறை துணை செயலாளரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி பொருளாளருமான பரிமளாசெல்வி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரத்யேக இணையதளத்தில் பணம் செலுத்தியவர்கள் விபரம் இடம்பெற்றுள்ளதாகவும், அதேவேளை, அரசின் சேமிப்பு வங்கி கணக்கு, வரைவோலை, காசோலை, கூகுள் பே, அமேசான் பே உள்ளிட்ட பல்வேறு வகையில் நிதி வருவதால் அவற்றை ஒருங்கிணைப்பதில் சிரமம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அனைத்தையும் தொகுத்து இணையதளத்தில் வெளிப்படைத் தன்மையுடன் முழு விவரங்களை இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இணையதளத்தை பராமரித்து வரும் தேசிய தகவல் மையத்துடன் அரசு இணைந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், 10 லட்ச ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கியவர்களின் பட்டியல் முதலமைச்சர் சார்பில் பத்திரிகை செய்தியாக வெளியிடப்பட்டு தினசரி நாளிதழ் மற்றும் காட்சி ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெறும் தொகை அனைத்தும், மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு அதனை மருத்துவ உபகரணங்கள், தனிமைப்படுத்தும் மையங்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் வீடற்றவர்களுக்கு உணவு பொருள் வழங்கல், பொது சுகாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் குறைவான எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிக்கு வருவதாலேயே இது குறித்த முழுமையான விவரங்களை வெளியிட தாமதமாகிறதே தவிர இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version