18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள போதும், இருப்பு இல்லாததால் பல இடங்களில் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கூடுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனா பாதிப்பு 200க்கும் மேல் பதிவாகிறது.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணத்தால், கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் எப்போது தொடங்கும் என மருத்துவமனைகளில் தெரிவிப்பதில்லை எனவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாமுக்கு நூற்றுக்கணக்கானோர் படையெடுத்தனர்.
இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
தடுப்பூசி மையங்களில் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வசதிகளை அதிகரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சிவகாசி நகராட்சி அலுவலகத்தில், சுகாதாரத்துறை சார்பாக, 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் டோஸ்கள் மட்டுமே சிவகாசிக்கு வழங்கப்பட்டதால், தடுப்பூசி செலுத்த நூற்றுக்கணக்கானோர் முண்டியடித்தனர்.
பலர் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், கூட்டத்தை கண்டு தொற்று பரவல் அச்சம் காரணமாக சிலர் திரும்பிச் சென்றனர்.
கரூர் கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதியில், தடுப்பூசி செலுத்த 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
முறையான பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
வெயிலில் வரிசையில் காக்க வைத்து, அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.