பொதுத்தேர்விற்கு தாமதம்.. 2 கி.மீ திடுதிடுவென்று ஓடி பள்ளிக்குசென்ற மாணவிகள்!

பீகார் மாநிலத்தில் பிப்ரவரி 14ம் தேதி 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தொடங்கியிருக்கிறது. தேர்வு எழுதுபவர்களில், ஆண்களை விட பெண்களே அதிகம். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கைமூர் பகுதி மாணவிகள் தேர்வுக்கு புறப்பட்டு செல்லும்போது அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றுள்ளன.

நடுவில் சிக்கிக்கொண்ட மாணவிகள் தேர்வு மையத்திற்கு எப்படி செல்லப்போகிறோம் என்று பயத்திலேயே இருந்திருக்கின்றனர். நேரம் போக போக நெரிசல் கூடுகிறதே தவிர, குறைத்த பாடில்லை. தேர்வு மையத்திற்கு செல்ல அப்பகுதியிலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் இருந்ததால் தேர்வர்களை அழைத்து செல்லும் பெற்றோரும் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

ஒருகட்டத்தில் மாணவிகள் தங்கள் வாகனங்களை விட்டுவிட்டு நெடுஞ்சாலையில் ஓடத் தொடங்கினர், தேர்வுக்கு தேவையான ஹால் டிக்கெட், பேனா போன்றவற்றை கையிலேயே எடுத்துக்கொண்டு ஓடியது பார்ப்பவர்களை ஆச்சர்யமடைய வைத்தது. மேலும் இச்சம்பவங்களை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதையடுத்து அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மாணவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் தேர்வுக்கு செல்ல ஓடி சென்று தேர்வெழுதிய அணைத்து மாணவிகளுக்கும் “நாம ஜெயிச்சிட்டோம் மாறா” போன்ற கேப்ஷன்களை வைத்து சோசியல் மீடியாக்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்

Exit mobile version