பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்னர்.

கீழ்பென்னாத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதியான சோமாசிபாடி, மங்கலம், வேடந்தவாடி, இராந்தம் உள்ளிட்ட பகுதியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகிறது. கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதிகளில் கரும்பு, நெல், வேர்க்கடலை, காய்கறி பயிர்கள் நிறைந்த பகுதியாகும். வறட்சி நிலவி வந்த நிலையில் தற்போது இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல், வந்தவாசி சுற்றுப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கீழ்கொடுங்காளூர், மாம்பட்டு, ஆராசூர் வெண்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகளில் நீர் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக அனல் காற்று வீசி வந்த நிலையில், மங்கைநல்லூர், கோமல், குத்தாலம், எலந்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவுகிறது.

காஞ்சிபுரம் பகுதியில் திடீரென சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவிவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஒரு வார காலமாக அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று இரவு திடீரென அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.

Exit mobile version