கொரோனா தொற்று காரணமாக, ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரை மூடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தளர்வு வழங்கப்பட்டுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் ஞாயிற்றுக் கிழமையான இன்று மெரினா கடற்கரையில் அனைத்து வாயில்களும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், காமராஜர் சாலையை ஒட்டிய நடைபாதையில் பயிற்சி மேற்கொண்டனர். கடற்கரைக்கு செல்பவர்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பினர். இதன் காரணமாக மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. கலங்கரை விளக்கம் அருகே உள்ள லூப் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டிற்கு செல்லும் மக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.