மன அழுத்தத்தை குறைக்கக் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன் கேம்கள் சில, மனிதர்களின் உயிரைப்பறிக்கும் வகையில் மாறும் ஆபத்தாக மாறி வருகிறது.
விளையாட்டு வினையான பரிதாபம் உலகம் சுருங்கி உள்ளங்கையில் செல்போன் என்ற பெயரில் வலம் வருகிறது. மனிதர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், அதேபோல் மன அழுத்தத்தை அதிகரிக்கும் கருவியாகவும் இந்த செல்போன் திகழ்கிறது.
அறிவிக்கப்படாத மனித உறுப்புகளில் ஒன்றாக மாறிய இந்த செல்போன்களில் விளையாடப்படும் கேம்கள் சமீப கால இளைஞர்களை பெரிதும் பாதித்துள்ளது. இளைஞர்களின் உயிர்களை குடித்த புளுவேல் கேமின் தாக்கம் குறைந்த வந்த நிலையில் தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பப்ஜியும் அதன் வரிசையில் இணைந்துள்ளது. சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவர் மத்தியில் பிரபலமான ஒரு செல்போன் கேமாக பப்ஜி உருவெடுத்துள்ளது.
வன்முறையை தூண்டுவதாக உள்ள பப்ஜி கேமால் சிலர் மூர்க்கத்தனமாகவும் செயல்படுவதாகவும் கருத்துக்கள் வெளிவந்த நிலையில் பொழுதுபோக்காக விளையாடப்படும் விளையாட்டால் சில உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன.
ஏற்கனவே மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த நீச்சல் வீரரான 12ம் வகுப்பு மாணவர் பப்ஜி மோகத்தால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த நிலையில் தமிழகத்திலும் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் சதீஸ்குமார், பப்ஜி விளையாடிக்கொண்டிருக்கும் போது உயிரிழந்துள்ளார். ஊரடங்கால் வீட்டில் இருந்து வந்த சதீஸ்குமார் சமீபத்தில் பழுதான தனது செல்போனை சரிசெய்து தர வேண்டும் எனவும், தாம் பப்ஜி கேமில் தோற்றால் நண்பர்கள் தம்மை கேலி செய்வார்கள் என்றும் அடம்பிடித்துள்ளார்.
செல்போன் சரி செய்யப்பட்ட நிலையில் மதியம் தனியாக சென்று விளையாடிக்கொண்டிருந்த சதீஸ் குமார் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த மாணவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பப்ஜி விளையாட்டால் தமிழகத்தில் இது முதல் உயிர் பலியாகும்.
பப்ஜி மீதான மோகம் மாணவனை உயிரிழக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மன அழுத்தத்தை குறைக்கவே விளையாட வேண்டும் என்ற நிலை சென்று விளையாட்டால் மன அழுத்தம் ஏற்படும் சூழல் உருவாகி உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட உயிர்க்கொல்லி விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.