பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட சிஎம்எஸ்-1 செயற்கைக்கோள் வெற்றிக்கரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஜிசாட்-2 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிவடைந்ததை அடுத்து, அதற்கு மாற்றாக சிஎம்எஸ்-1 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து சரியாக 3.41 மணிக்கு சிஎம்எஸ்-1 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது.
பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 52வது விண்வெளி பயணத்தில்,42வது தகவல்தொடர்பு செயற்கைகோளான சிஎம்எஸ்-1-ஐ சுமந்துச் சென்றுள்ளது. சரியாக 21 நிமிடங்களில் புவி வட்டப்பாதையில் சிஎம்எஸ்-1 செயற்கோள் வெற்றிக்கரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்து 410 கிலோ கொண்ட இந்த செயற்கைக்கோள், இணைய வழிக் கல்வி, தொலைதூர மருத்துவம், பேரிடர் மேலாண்மை ஆகிய பணிகளுக்கு தேவையான தரவுகளை வழங்குவதில் உதவிக்கரமாக இருக்கும். செயற்கைக்கோளில் உள்ள சி-பேண்ட் அலைக்கற்றைகள் இணைய சேவை மற்றும் செல்போன் சேவைகளை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இந்திய நிலப்பரப்பு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
விண்வெளிக்கு அடுத்து ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாட்டுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அடுத்து ஆனந்த் என்ற செயற்கைக்கோளை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன் தொடங்கப்படும் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய செயற்கைக்கோள் ஆனந்த் விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இது புவி கண்காணிப்புக்கு உதவும்